சென்னையில், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-10-10 04:36 GMT

தலைமைச் செயலாளர் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட ராஜமன்னார் சாலை, ரெயில்வே பார்டர் சாலை, பசுல்லா சாலை, தேனாம்பேட்டை மண்டலத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயபுரம் மண்டலத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், நீர்வழி கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாருதல் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடையாறு முதல் அண்ணா பிரதான சாலை வரை மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகள், கொளத்தூர் ஏரியில் இருந்து உபரிநீர் தணிகாசலம் கால்வாயில் சென்றுசேரும் வகையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி, நீர்வளத்துறை சார்பில் அரும்பாக்கம் 100 அடி சாலை அருகே விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி மற்றும் செடி, கொடி, திடக்கழிவுகளை அகற்றும் பணி, கொளத்தூர் ஏரியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப்பணிகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி, மணலி ஆ.முல்லைவாயல் பகுதியில் புழல் உபரி நீர் கால்வாயில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

வெள்ளப்பெருக்கை தடுக்கும் பணி

மணலி மண்டலத்துக்கு உட்பட்ட வெள்ளிவாயில், கன்னியம்மன் கோவில் பகுதி, மகாலட்சுமி நகர், வடிவுடையம்மன் நகர் போன்ற சுற்று வட்டார பகுதிகளில் பூண்டி நீர் தேக்கத்தின் உபரிநீர் மற்றும் உள்ளூர் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீரினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசஸ்தலை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி சீர் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.

தேனாம்பேட்டை மண்டலம். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை - சிவசாமி சாலை சந்திப்பில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன பணிகளின் காரணமாக மின்வாரிய புதைவட கம்பிகளை மாற்றி அமைக்கும் பணிகளையும் இறையன்பு ஆய்வு செய்தார்.

விரைவாக மேற்கொள்ள வேண்டும்

இந்த ஆய்வின்போது, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் மழைநீர் வடிகால் தொடர்பான அனைத்து பணிகளையும் காலதாமதமின்றி விரைவாக மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்