சென்னையில் குப்பை லாரிகளை இயக்க கால நிர்ணயம் செய்ய முடியாது; ஐகோர்ட்டு உத்தரவு

சென்னையில் குப்பை லாரிகளை இயக்க கால நிர்ணயம் செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-20 13:13 GMT

சென்னை,

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் வக்கீல் ஆனந்த். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''சென்னை மாநகரில் துர்நாற்றம் வீசும் குப்பைகளை சேகரித்து குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் குப்பை லாரிகளின் பின்னால் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை.

இந்த லாரிகளில் இருந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் விபத்து ஏற்படுகிறது. குப்பைகள் மீது வலைகளைப் போர்த்தாமல் செல்வதால் லாரியில் இருந்து குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் கொட்டுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அலுவலக நேரத்தில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதால், மாணவர்கள், அலுவலகம் செல்வோர் உள்ளிட்டோர் கடும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர்.

வெளிநாடுகளில் இரவு நேரங்களில் மட்டுமே குப்பை லாரிகள் இயக்கப்படுகின்றன. அதேப்போல, சென்னையிலும் இரவில் மட்டும் குப்பை லாரிகளை இயக்கவும், பகலில் குப்பை லாரிகளை இயக்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர், குப்பை லாரிகள் இயக்குவதற்கு கால நிர்ணயம் செய்ய முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்