கொலை வழக்கில் தலைமறைவான தொழிலாளி கைது

மயிலாடும்பாறை அருகே கொலை வழக்கில் தலைமறைவான தொழிலாளியை போலீசார் கைது செய்தனா்

Update: 2022-10-01 16:24 GMT

மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சின்னவெள்ளை. (வயது 73). கூலித்தொழிலாளி. கடந்த 1985-ம் ஆண்டு இவரை, கொலை வழக்கில் கடமலைக்குண்டு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆண்டிப்பட்டி கோர்ட்டு சின்னவெள்ளைக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த 1997-ம் ஆண்டு தனது மகனின் உடல் நிலையை காரணம் காட்டி சின்னவெள்ளை 5 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். பரோல் முடிந்தும் சின்னவெள்ளை சிறைக்கு திரும்பவில்லை. இதனையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது சின்னவெள்ளையை காணவில்லை. அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. பின்னர் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சின்னவெள்ளை கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து கடமலைக்குண்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவா் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்