எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைசொல்வதை தி.மு.க. நிறுத்த வேண்டும்-சிவகங்கை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

பிரதமரின் தேசிய மாடல் ஆட்சியில் சாதனை திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதை தி.மு.க. நிறுத்த வேண்டும் என்று சிவகங்கை பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

Update: 2022-06-06 18:23 GMT

சிவகங்கை, 

பிரதமரின் தேசிய மாடல் ஆட்சியில் சாதனை திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதை தி.மு.க. நிறுத்த வேண்டும் என்று சிவகங்கை பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

பொதுக்கூட்டம்

சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகங்கை சண்முகராஜா கலை அரங்கில், மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் போது:-

தி.மு.க. எப்போதும் ஊழல் கட்சிதான். எப்போதுமே அவர்கள் சொன்னதை நிறைவேற்றும் கட்சி இல்லை. இந்த கூட்டம் எதை நிரூபிக்கிறது என்றால் தமிழகத்தை ஆளுகின்ற கட்சி பா.ஜ.க.தான் என்று நிரூபித்துள்ளது என்றார்.

அண்ணாமலை

கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

இன்று தமிழகத்தில் தி.மு.க.வினர் ஓராண்டு சாதனை என்று கூறுகின்றனர். ஆனால் அதை ஓராண்டு வேதனை என்று தான் கூற வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கியதில் ஊழல். கிராமப் பகுதிகளில் மின்தடை என ஏராளமான வேதனையை தந்ததுதான் கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சி. ஆனால் இன்று பா.ஜ.க. அரசு மத்தியில் 8 ஆண்டுகளை முடித்து 9-வது ஆண்டை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் வீடு இல்லாத ஏழைகள் இருக்கக்கூடாது என்பதற்காக 14 லட்சத்து 1,870 பேருக்கு வீடுகளை பிரதமர் கட்டிக் கொடுத்துள்ளார். இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு என்ற நிலை உருவாகும். ஆனால் தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசு மத்திய அரசின் திட்டங்களில் கூட லஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர்.

இன்று இந்திய நாடு டிஜிட்டல் நாடாக மாறி வருகிறது. பிரதமரின் தேசிய மாடல் ஆட்சியில் சத்தமில்லாமல் சாதனை திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 8 ஆண்டில் வங்கிக்கணக்கு இல்லாத 45 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திற்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய் சாலை பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

25 எம்.பி.க்களை அனுப்ப வேண்டும்

பொங்கல் பொருட்கள் வழங்கியதில் தவறு செய்த நிறுவனங்கள் கருப்பு லிஸ்டில் வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். ஆனால் இதுவரை ஒரு நிறுவனத்தை கூட அவ்வாறு வைக்கவில்லை.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் போக்கை தி.மு.க. மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் 15-ந் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் இந்த தேர்வை 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் அதிகம் எழுதுகின்றனர்.

வரும் தேர்தலின் மூலம் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. சிவகங்கையில் இருந்து டெல்லி செல்ல வேண்டும். 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா சார்பில் 25 எம்.பி.களை நாம் டெல்லிக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தின் குரல் சிங்கக்குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித. பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் மார்த்தாண்டன், நாகராஜன், முருகேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாநில விவசாய அணி தலைவர் எஸ்.ஆர்.தேவர், மாவட்ட துணைத்தலைவர்கள் நாராயணன், சுரேஷ்குமார்,கண்ணையா, மாவட்ட செயலாளர்கள் நடராஜன், சீனிவாசன், கந்தசாமி, லட்சுமி, மீனா தேவி, மாவட்ட துணைத்தலைவர் சுகவனேஸ்வரி, மகளிர் அணி தலைவி கோமதி, காசிராஜா, பாண்டித்துரை, சிவகங்கை நகர் தலைவர் உதயா, பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் விஸ்வாதகோபாலன், முன்னாள் மாநில செயலாளரும், ராமேசுவரம் கோட்ட பா.ஜ.க பட்டியல் அணி இணை பொறுப்பாளர் லயன்.ஆதீனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்