சாலையோர பள்ளத்தில்கார் கவிழ்ந்து தீப்பிடித்தது

சூரங்குடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் கட்டிட கான்டிராக்டர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

Update: 2023-01-25 18:45 GMT

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே நேற்று சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த கட்டிட காண்டிராக்டர், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்.

கட்டிட காண்டிராக்டர்

தூத்துக்குடி தாமோதரன் நகரை சேர்ந்த ஜோதிவேல் மகன் கார்த்தி (வயது 42). கட்டிட காண்டிராக்டர். இவர் நேற்று தனது காரில் சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சண்முகபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விளாத்திகுளத்தை அடுத்த சூரங்குடி அருகே சென்றபோது, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

கார் தீப்பற்றி எரிந்தது

சிறிது நேரத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி எரிந்தது.

அப்போது கார் இடிபாடுகளுக்குள் கார்த்தி சிக்கியிருந்தார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இதனால் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சூரங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து விட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

காயம் அடைந்த கார்த்தி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்