ஈரோட்டில் உள்ள விசைத்தறி கூடத்தில் மின்மோட்டார் வெடித்ததால் தீ விபத்து; உடல் கருகி மாற்றுத்திறனாளி சாவு வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் பரிதாபம்

வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் பரிதாபம்

Update: 2022-10-01 04:45 GMT

ஈரோட்டில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் மின்மோட்டார் ெவடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி மாற்றுத்திறனாளி இறந்தார். அவர் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

விசைத்தறி கூடம்

ஈரோட்டை சேர்ந்த பெரியசாமி என்பவர், ஈரோடு பெரியவலசு கொத்துக்கார வீதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தை ஒப்பந்தம் எடுத்து கடந்த 6 மாதங்களாக நடத்தி வந்தார். இதில் மொத்தம் 24 தறிகள் உள்ளன. இந்த விசைத்தறி கூடத்தில் ஈரோட்டை சேர்ந்த நீலமேகம், செந்தில்குபேரன் மற்றும் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான விஜயன் (வயது 40) ஆகியோர் நேற்று வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் முதல் நாளாக நேற்றுதான் பணிக்கு சேர்ந்துள்ளனர். விசைத்தறி கூட உரிமையாளரான பெரியசாமி சாப்பிடுவதற்காக மதியம் வெளியே சென்று விட்டார். நீலமேகம், செந்தில்குபேரன், விஜயன் ஆகியோர் தறிகளை ஓட்டினர்.

தீ விபத்து

அப்போது தறிப்பட்டறையில் உள்ள மின் மோட்டார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் தீப்பிடித்த ஒரு கட்டை நீலமேகத்தின் தோளில் விழுந்தது. அவர் லேசான காயத்துடனும், செந்தில்குபேரன் காயமின்றியும் உடனடியாக வெளியேறினர்.

இதற்கிடையில் விசைத்தறி கூடத்தின் கடைசி பகுதியில் வேலை பார்த்த மாற்றுத்திறனாளி விஜயனால் வெளியேற முடியவில்லை. மேலும் விசைத்தறி கூடம் முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் அக்கம் பக்கத்தினரால் உள்ளே சென்று விஜயனை மீட்க முடியவில்லை. இதற்கிடையில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் கருகிய நிலையில் அவர் அலறி துடித்தார்.

மாற்றுத்திறனாளி சாவு

உடனே இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசைத்தறி கூடத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பின்னர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த விஜயனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

மேலும் இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விஜயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரூ.20 லட்சம் மதிப்பிலான...

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறும்போது, 'மின் மோட்டாரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் இறந்துள்ளார். மேலும் ரூ.20 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள், ஜவுளி, பாவு, நூல் போன்றவை தீயில் எரிந்து நாசமாகி உள்ளது' என்றனர்.

விசைத்தறி கூடம் தீப்பற்றி எரிந்ததில் மாற்றுத்திறனாளி இறந்தது ஈரோட்டில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ விபத்து குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்