மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
தூத்துக்குடி மில்லர்புரம் ஜே.பி.காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 52). இவர் தனியார் சரக்கு பெட்டக முனைய நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலையில் தனது மனைவி பிரியரஜனியுடன் குலையன்கரிசலில் உள்ள ஒரு வங்கிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அவர் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையை கடந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெகநாதன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.