குடும்ப தகராறில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு ; மருமகன் உள்பட 2 போ் கைது

மானூர் அருகே குடும்ப தகராறில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மருமகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-01 20:12 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூரைச் சேர்ந்தவர் மணிசுடலை (வயது 60). விவசாயி. இவரது மகள் தனலட்சுமியை அதேஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், (33) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு காவியா (12), மகத் சாய் (3) என இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக தனலட்சுமி குடும்பத் தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் பாலசுப்பிரமணியன் 2-வதாக உருதலட்சுமி (28) என்பவரை திருமணம் செய்துள்ளார். தனலட்சுமிக்கு பிறந்த குழந்தைகளை பார்த்து வருவதில் இரு குடும்பத்தாருக்கும் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் வெளியூரில் இருந்த மணிசுடலையின் மகன் ஜெயக்குமார் (32) என்பவர் தனது சகோதரியின் குழந்தைகளை பார்ப்பதற்காக பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த உருதலட்சுமிக்கும், ஜெயக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்து குழந்தை காவியாவை மட்டும் ஜெயக்குமார், மணிசுடலை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தனது உறவினர் கந்தகுமார் (31) என்பவரோடு கையில் அரிவாளுடன் மணிசுடலை வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இதில் மணி சுடலைக்கு தலையில் வெட்டுவிழுந்தது. மேலும் பாலசுப்பிரமணியனிடமிருந்து அரிவாளை, ஜெயக்குமார் பிடுங்க முயற்சித்தபோது, அவர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த மணி சுடலை, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், கந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்