கோவில்பட்டி அருகே பஸ்-கார் மோதியதில் 3 என்ஜினீயரிங் மாணவர்கள் பலி

கோவில்பட்டி அருகே பஸ்-கார் மோதியதில் 3 என்ஜினீயரிங் மாணவர்கள் பலியாகினர்.

Update: 2022-12-19 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே பஸ்-கார் மோதிய கோர விபத்தில் 3 என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

என்ஜினீயரிங் மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் மகன் கீர்த்திக் (வயது 23). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் கீர்த்திக் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களான நாலாட்டின்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (23), வானரமுட்டி வெயிலுகந்தபுரத்தை சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (24), வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (21), சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (22) ஆகியோரை தனது காரில் அழைத்துச்சென்றார். காரை கீர்த்திக் ஓட்டினார்.

கார்-பஸ் மோதல்

கோவில்பட்டி அருகே அய்யனேரி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அதே வழியில் எதிரே கோவில்பட்டியில் இருந்து ஜமீன்தேவர்குளம் நோக்கி தனியார் டவுன் பஸ் வந்து கொண்டு இருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் காரும், பஸ்சும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் காரும், பஸ்சும் சிறிது தூரத்தில் இழுத்து செல்லப்பட்டது. கார் அப்பளம் போல் நொறுங்கியது.

போலீசார் விரைந்தனர்

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கோவில்பட்டி மேற்கு போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த மற்றும் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்கள் சுந்தர் தலைமையிலும் அங்கு விரைந்து வந்தனர்.

3 பேர் சாவு

காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த கோர விபத்தில் கீர்த்திக், அஜய், செந்தில்குமார் ஆகியோர் காரில் அமர்ந்தபடி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானது தெரியவந்தது.

அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள். 2 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்சில் பயணித்த பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி (65) என்பவரும் காயம் அடைந்தார்.

குடும்பத்தினர் கதறல்

இதுகுறித்து தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர், வானரமுட்டி, வீரவாஞ்சிநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பலியானவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்