2026-ம் ஆண்டில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும் -அன்புமணி ராமதாஸ் பேட்டி

2026-ம் ஆண்டில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Update: 2022-11-21 20:53 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சந்தித்தார். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது பா.ம.க. வடக்கு மண்டல பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, தர்மபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிடப்பில் உள்ள ரெயில்வே திட்டங்கள்

தர்மபுரி-மொரப்பூர், திண்டிவனம்-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை, அத்திப்பட்டு-புத்தூர், சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி-கடலூர் இணைப்பு திட்டம், ஈரோடு-பழனி இணைப்பு திட்டம், மதுரை-தூத்துக்குடி இணைப்பு திட்டம், இரட்டை ரெயில் பாதை திட்டம், ரெயில் நிலையங்கள் மின்மயமாக்கல் உள்ளிட்ட நிலுவையில் உள்ள தமிழக ரெயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றக்கோரி தெற்கு ரெயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

குறிப்பாக திண்டிவனம்-நகரி திட்டம் தொடங்கப்பட்டு, பாலாற்றின் குறுக்கே அணையும் கட்டப்பட்டு விட்டது. ஆனாலும் இந்த திட்டம் 12 ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது. தற்போது இந்த திட்டத்துக்காக ரூ.400 கோடி நிதி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதியும் போதுமான அளவு வந்துள்ளது. எனவே 70 ஆண்டு கால மக்களின் எதிர்பார்ப்பான தர்மபுரி-மொரப்பூர் உள்பட நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தொலைநோக்கு திட்டங்கள் தேவை

மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தவரின் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டே வருகிறது. எனவே ரெயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் முறையாக நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளுமே 5 ஆண்டு திட்டங்களை முன்வைத்தே ஆட்சி நடத்துகின்றன. இப்போதைய சூழலில் அடுத்த 20, 30 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை திட்டமிடுவது அவசியமாகும்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் ஏராளமான நீர்நிலைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சென்னை அருகே உள்ள திருப்போரூரில் 5 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது. இதனை விமான நிலைய திட்டத்துக்காக பயன்படுத்தி கொள்ளலாம். இதுதொடர்பான பா.ம.க.வின் கருத்தை கேட்க அரசு முன்வந்தால், எங்கள் கருத்தை சொல்ல நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதற்காக பா.ம.க. சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வும் நடத்தியிருக்கிறது.

பா.ம.க. ஆட்சி

சத்தீஷ்கார் மாநிலத்தில் இடஒதுக்கீடு சதவீதம் 81 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். தமிழகத்திலும் அந்த நிலை வரவேண்டும். விகிதாச்சார அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் இடஒதுக்கீடு தேவை. ஆன்-லைன் சூதாட்டத்துக்கு எதிரான தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. எனவே தாமதிக்காமல் இந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.

தமிழக கவர்னர் - முதல்-அமைச்சர் இடையே எந்தவிதமான 'ஈகோ'வும் இருப்பது நல்லதல்ல. இருவர் இடையே நடக்கும் அரசியல் தமிழக மக்களுக்கு தான் பாதிப்பாக அமையும். 2026-ம் ஆண்டில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும். 2024-ம் ஆண்டில் அதற்கான வியூகங்கள் தெரியவரும். எல்லாவற்றையும் விட 'ஆவின்' பால் விலை உயர்வை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்