தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்...!
சென்னை, மதுரை உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
சென்னை,
தென் மேற்கு பருவமழை தொடங்கிய பின், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்ப, தற்போது மேற்கு திசை காற்றும் தமிழக பகுதிகளில் வீசத் தொடங்கி இருக்கிறது. இருப்பினும், வெயிலின் கொடுமை இன்னும் ஓய்ந்தப்பாடில்லை. இன்றும் தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
சென்னை, மதுரை, பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், திருத்தணி, வேலூர் உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 105 டிகிரி வெயில் பதிவானது. 100 டிகிரிக்கு மேல் பதிவான இடங்களில் கரூரில் இயல்பைவிட 5 டிகிரி, கன்னியாகுமரி, கொடைக்கானல் தலா 4 டிகிரி வெயில் அதிகரித்து இருந்தது.