விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சிறை தண்டனை

கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-07-08 11:28 GMT

கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம்

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் 1985-ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு 1998 முதல் 11 ரகங்கள் கைத்தறிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை அமல்படுத்தும் வகையில் கைத்தறி துறையில் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு சென்னையை தலைமையகமாகக் கொண்டு ஈரோடு, சேலம், திருச்செங்கோடு, திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய ரகங்களான கரை பாவு பேட்டு டிசைனுடன் கூடிய காட்டன் வேட்டி ரகம், பாவு பேட்டு, ஊடை பேட்டு மற்றும் புட்டா டிசைனுடன் கூடிய காட்டன் மற்றும் பட்டு சேலை ரகம், கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு ரகம், கரை பாவு பேட்டு டிசைன் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட் மற்றும் சத்தார்க் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

6 மாத சிறை தண்டனை

இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி சட்டத்தை மீறிய செயலாகும். இது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின் போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்சமாக 6 மாத சிறை தண்டனையோ அல்லது அதிகபட்சமாக விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனையாக வழங்கப்படும்.

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற சென்னை குறலகம் 2-ம் தளத்தில் உள்ள கைத்தறி ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் துணை இயக்குனர் அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்