வருமான வரி செலுத்தாவிட்டால் சிறைத்தண்டனை; முதன்மை தலைமை கமிஷனர் எச்சரிக்கை

வருமான வரி செலுத்தாவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் ராமசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-04-27 22:38 GMT

சென்னை,

வருமான வரித்துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் ராமசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2022-23-ம் நிதியாண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தில் வருமான வரியாக ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 364 கோடி வசூலாகி உள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாகும். வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டிய வரித்தொகை (ரீபண்ட்) 16 ஆயிரத்து 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வரி பிடித்தம் மூலம் மட்டும் 59 ஆயிரத்து 887 கோடியே 60 லட்சம் ரூபாய் வரி வசூலாகி உள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 24.85 சதவீதம் அதிகம் ஆகும்.

வரி ஏய்ப்பு சம்பந்தமாக 92 ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.159 கோடியே 52 லட்சம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.78.51 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பல தனியார் நிறுவனங்கள், ஊராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வரியை வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை. வட்டி மற்றும் அபராதத்துடன் பிடித்தம் செய்யப்பட்ட வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

7 பேருக்கு சிறைத்தண்டனை

வருமான வரி செலுத்தாதவர்கள், பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியை வருமான வரித்துறைக்கு செலுத்தாத நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தமட்டில் வட்டி மற்றும் அபராதத்துடன் வரியை வசூலித்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 7 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் ஒரு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். 22 ஆயிரம் அரசுத்துறைகள் வருமான வரி பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு செலுத்தி வருகின்றன. இதில், வரி பிடித்தம் செய்து அதை செலுத்தாதவர்களுக்கு உரிய பயிற்சியை அளிக்கிறோம்.

வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகிறோம். வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட தொகைக்கு மேலான பண பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வந்து விடும்.

இந்த விவரங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து வருமான வரியை தாக்கல் செய்யும்படி வலியுறுத்துகிறோம். வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் பான் கார்டு இணைப்பு மூலமாக வருமான வரித்துறைக்கு தெரிந்துவிடும். பான்கார்டு-ஆதார் இணைப்பை பொறுத்தமட்டில் பெரும்பாலானோர் மேற்கொண்டுள்ளனர். தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக சிலர் மட்டுமே இதை மேற்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் அவ்வப்போது இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

அருங்காட்சியகம்

வருமான வரித்துறை அலுவலகங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர், வரி பிடித்தம் செய்வோர் வசதிக்காக 'ஆஸ்க்' என்ற சேவைப்பிரிவை பல்வேறு அலுவலகங்களில் தொடங்கி உள்ளோம்.

காரைக்குடியில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வருமான வரி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு நாட்டிலேயே முதன்முறையாக வரி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் வரி கணக்குகள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை கமிஷனர் ரத்தினசாமி கூறும்போது, 'வரி வசூல்தான் நாட்டின் முக்கியமான நிதி ஆதாரம். இதில் பாதிக்கு மேல் வரி பிடித்தம் மூலம் தான் கிடைக்கிறது. வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் நிதி பரிவர்த்தனை, வணிக பரிவர்த்தனையை முறையாக கண்காணித்து வருகிறோம். இதன் காரணமாகவே ஆண்டுதோறும் வரி வருமானம் அதிகரித்து வருகிறது. வரி பிடித்தம் செய்பவர்களுக்கு அதுதொடர்பான நடைமுறை தெரியாததால் குறைபாடு உள்ளது. இதையெல்லாம் பயிற்சியின் மூலம் சரி செய்து வருகிறோம் என்றார்.

பேட்டியின் போது தலைமை கமிஷனர் ஜெயந்தி கிருஷ்ணன் உடன் இருந்தார்.

வருமான வரி கையேடு தமிழில் வெளியீடு

வருமான வரித்துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலம் முதல்முறையாக வருமான வரி பிடித்தம் தொடர்பான கையேட்டை தமிழில் தயாரித்துள்ளது. இதனை வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் ராமசாமி நேற்று வெளியிட்டார். தனியார் நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் பலருக்கு வரி பிடித்தம் தொடர்பான நடைமுறை தெரியவில்லை. இந்த நடைமுறையை முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் இந்தப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு வீடியோ

வரி பிடித்தம் செய்பவர்களுக்கு உதவுவதற்காக https://youtube.com/@incometax tamilnaduandpuduc9090 என்ற யூடிப் இணைப்பில் 16 தலைப்புகளில் வருமான வரித்துறை 'வீடியோ' வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவும் தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வரி பிடித்தம் செய்பவர்கள் அதுதொடர்பான பணிகளை சுலபமாக மேற்கொள்ளமுடியும்.

Tags:    

மேலும் செய்திகள்