கணவரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு:கைதான இளம்பெண், கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு

Update: 2023-08-14 19:45 GMT

கிருஷ்ணகிரி

மகராஜகடை அருகே கணவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய வழக்கில் கைதான இளம்பெண், கள்ளக்காதலன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்காதல்

கிருஷ்ணகிரி மகராஜகடை அருகே கள்ளநாயக்கன்பள்ளம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிணற்றில் கிடந்தது. அதன் உடலில் கல்லை வைத்து கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. இது குறித்து மகராஜகடை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஆத்துகாவாய் பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி மைக்கேல்ராஜ் (36) என தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மைக்கேல்ராஜை அவரது மனைவி ஜோஸ்பின் சிந்து (28), கள்ளக்காதலன் விக்ரம் (19) ஆகியோர் சேர்ந்து அடித்துக்கொலை செய்து உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

சிறையில் அடைப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் மகராஜகடை அருகே வசித்து வந்தார். கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். அவருடன் வேலை செய்த கிருஷ்ணகிரி தர்மராஜா நகரை சேர்ந்த விக்ரம் (19) என்பவர் மைக்கேல்ராஜ் வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது அவருக்கும், ஜோஸ்பின் சிந்துவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஆனது. அவர்கள் தங்களின் கள்ளக்காதலை தொடர மைக்கேல்ராஜை கொலை செய்தது தெரிய வந்தது.

இவ்வாறு கூறினார்கள்.

கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜோஸ்பின் சிந்து சேலம் பெண்கள் கிளை சிறையிலும், விக்ரம் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்