மாமல்லபுரம் பிடாரி ரதம் பின்புற சாலையில் குப்பை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிப்பு

மாமல்லபுரம் பிடாரி ரதம் பின்புற சாலையில் குப்பை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது.

Update: 2023-04-29 09:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் பழைய சாலை வாகன போக்குவரத்து குறைவாக உள்ள சாலையாகும். இந்த சாலையில் உள்ள பிடாரி ரதம் அருகில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகளை இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து மர்மநபர்கள் கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அந்த வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்பட்டனர்.

மர்ம நபர்களால் கொட்டப்படும் குப்பைகளால் பல்வேறு நோய் தாக்குதலுக்கும் பொதுமக்கள் ஆளாக வேண்டிய நிலை இருந்தது. அங்குள்ள கருக்காம்மன் கோவில் வரை குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பலர் முகம் சுழித்தனர்.

இந்த நிலையில் பிடாரி ரதம் பின்புறம் வழக்கம்போல் 2 குப்பை வாகனங்கள் சாலையோரம் குப்பை கழிவுகளை கொட்டி கொண்டிருந்தது. இதை பார்த்த பேரூராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் விரைந்து சென்று குப்பை கழிவுகளை கொட்டிய வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

பேரூராட்சி அதிகாரிகளை பார்த்ததும் குப்பை கொட்டிய நபர்கள் வாகனத்துடன் தப்பிச்செல்ல முயன்றனர். அப்போது குப்பை வாகனங்களை மடக்கி பிடித்து, மாமல்லபுரம் போலீசில் பேரூராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனிடம் இதுகுறித்து அவர்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் போலீசில் ஒப்படைத்த குப்பை வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்