முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்
கள்ளக்குறிச்சியில் 2 குழந்தைகளுடன் தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதால் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என டி.ஐ.ஜி. பகலவன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆலடி பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவருடைய மனைவி பானுபிரியா.
மணிகண்டனுக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த வளர்மதி (37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டன் வளர்மதியை 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் மணிகண்டனும், வளர்மதியும் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நரிமேடு பகுதியில் வீடு கட்டி வசித்து வந்தனர். இவர்களுக்கு தமிழரசன் (11) என்ற மகனும், கேசவன் என்ற 8 மாத குழந்தையும் இருந்தது. சரக்கு வாகனத்தில் ஊர் ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்த மணிகண்டன் சாலை விபத்தில் இறந்தார்.
இதையடுத்து கணவரின் வியாபாரத்தை வளர்மதி தொடர்ந்து செய்து தனது குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்த நிலையில் வளர்மதி மற்றும் அவரின் குழந்தைகள் தமிழரசன், கேசவன் ஆகியோர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.
7 தனிப்படை அமைப்பு
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 3 பேரும் சொத்து பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டார்களா?, அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த கொலை சம்பந்தமாக வளர்மதியின் தங்கை வனிதா, அவரது கணவரான சென்னையை சேர்ந்த ரஜினிகுமார் மற்றும் மணிகண்டனின் முதல் மனைவி பானுபிரியா, உறவினர் அஞ்சலை மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ், முருகன் ஆகியோரை, விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.
டி.ஐ.ஜி.பேட்டி
இதனிடையே விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) பகலவன் நேற்று கொலை நடந்த வளர்மதியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த கொலை 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு நடந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கொலைகளை பொறுத்தவரை முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது. கொலைகளை செய்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், திருக்கோவிலூர் பகுதியில் உள்ள நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். குற்றவாளிகள் யார் என தெரிந்துள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் சென்றுள்ளனர் என்றார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.