குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முக்கியத்துவம்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முக்கியத்துவம்
கோவை
மேற்கு மண்டலத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி கூறினார்.
புதிய ஐ.ஜி. பொறுப்பேற்பு
கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல போலீஸ் அலுவலகம் கோவை ரேஸ்கோர்சில் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். அவர் சென்னை பெருநகர போக்குவரத்து இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை இணை கமிஷனராக பணியாற்றி வந்த கே.பவானீஸ்வரி மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ஐ.ஜி. பவானீஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
போதை பொருட்கள்
மேற்கு மண்டலத்தில் உள்ள அதிகாரிகள் நல்ல முறையில் பணியாற்றி வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக போதைப்பொருட்கள் எங்கு இருந்து வருகிறது என்பதை கண்டறிந்து, அவை விற்கப்படுவது தடுக்கப்படும். இது தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேற்கு மண்டலம் கேரளா மற்றும் கர்நாடக எல்லையில் உள்ளதால் மாவோயிஸ்டு நடமாட்டத்தை கண்காணித்து தடுத்து நிறுத்துவதுடன், சோதனை சாவடிகள் வலுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
தடுத்து நிறுத்தப்படும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவை தடுத்து நிறுத்தப்படும்.மேலும் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பணியாற்றிய இடங்கள்
2002-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வான பவானீஸ்வரி, சி.பி.சி.ஐ.டி.பிரிவு, கன்னியாகுமரி மாவட்ட மற்றும் கியூ பிராஞ்ச் பிரிவு ஆகியவற்றில் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணை கமிஷனராகவும், மெட்ரோவில் பாதுகாப்பு அதிகாரியாகவும், சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகவும் பணியாற்றினார். பின்னர் திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐ.ஜி.யாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.