கும்பகோணத்தில் வெற்றிலை விளைச்சல் பாதிப்பு

கோடை வெயிலால் கும்பகோணத்தில் வெற்றிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-05-18 19:51 GMT

கும்பகோணம்:

கோடை வெயிலால் கும்பகோணத்தில் வெற்றிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வெற்றிலை சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, வெற்றிலை போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, அந்தளி, கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தைச் சுற்றி உள்ள கிராமங்களான ஆவூர், தேனாம்படுகை, பட்டீஸ்வரம் வளப்பகுடி, திருக்கருகாவூர், கொற்கை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தனி மவுசு

வெற்றிலைக்கு பேர் போன ஊராக கும்பகோணம் விளங்குகிறது. இந்த பகுதியில் விளைவிக்கப்படும் வெற்றிலைகளுக்கு கற்பூர வெற்றிலை என்று பெயர்.கொஞ்சம் காரமாக இருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. இதனால் இந்தப் பகுதி வெற்றிலைகளுக்கு தனி மவுசு உண்டு

எந்த சுபநிகழ்ச்சி ஆக இருந்தாலும் அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது வெற்றிலை ஆகும். திருமணம், கோவில் விழாக்களில் கற்பூர வெற்றிலையை பயன்படுத்துவர். பீடாவுக்கு வெள்ளை வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.. பனிக்காலத்தில் வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருக்கும்.

விளைச்சலும் குறைந்தது

தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருவதால் பயிர்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த வெயில் காரணமாக கும்பகோணத்தில் வெற்றிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கும்பகோணத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 30 முதல் 50 கட்டுகள் (முட்டி) வெற்றிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஒரு முட்டியில் சிறிய கட்டுகளாக 25 கட்டுகள் வெற்றிலை இருக்கும். ஒரு கட்டில் குறைந்தது 100 வரை வெற்றிலை இருக்கும். தற்போது விளைச்சல் குறைவாக இருப்பதால் வெற்றிலை வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக வெற்றிலையின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் விலை உயரும்

இது குறித்து கும்பகோணத்தைச் சேர்ந்த வெற்றிலை வியாபாரி கூறுகையில். கோடை வெயிலால் வெற்றிலை விளைச்சல் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது. தேவைக்கு ஏற்ப வெற்றிலை வினியோகம் செய்யப்படுவதில்லை. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமானால் வெற்றிலையின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்