ரப்பர் பால்வெட்டும் தொழில் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ரப்பர் பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ரப்பர் பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
சாரல் மழை நீடிப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் நிலவி வந்த கடுமையான வெப்பம் குறைந்து ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் காணப்படும் ஜில்லென்ற சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவிலும், காலையிலும் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. பகலில் அவ்வப்போது வெயிலின் முகம் தென்பட்டது. மலையோர பகுதியில் பெய்து வரும் மழையால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் ெகாட்டுகிறது.
பால்வெட்டும் தொழில் பாதிப்பு
குலசேகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையால் ரப்பர் மரங்களில் பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். ரப்பர் மரங்களில் கட்டியுள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதே வேளையில் மழையினால் மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளதால் மழை ஓய்ந்த பிறகு ரப்பர் மரங்களில் இருந்து அதிக பால் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பாலமோரில் 29.4 மி.மீ. பதிவு
பேச்சிப்பாறை அணை- 6.6, பெருஞ்சாணி அணை- 14.6, சிற்றார்-1 அணை-12, சிற்றார்-2 அணை- 16.8, புத்தன் அணை- 13.6, மாம்பழத்துறையாறு அணை- 7.2, முக்கடல் அணை- 4.2, பூதப்பாண்டி- 7.2, களியல்- 6, கன்னிமார்- 3.6, கொட்டாரம்- 1.2, குழித்துறை- 4, மயிலாடி- 5.4, நாகர்கோவில்- 2.2, சுருளக்கோடு- 9.6, தக்கலை- 5.3, குளச்சல்- 4.6, இரணியல்- 6.2, பாலமோர்- 29.4, திற்பரப்பு- 14.2, ஆரல்வாய்மொழி- 1.4, கோழிப்போர்விளை- 10.2, அடையாமடை- 2, குருந்தங்கோடு-2, முள்ளங்கினாவிளை-9.6, ஆனைக்கிடங்கு- 4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 29.4 மி.மீ. பதிவானது.
1,225 கன அடி நீர்வரத்து
இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 826 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 646 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 301 கன அடி தண்ணீர் வரத்தாகவும், அணையில் இருந்து 20 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 40 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 58 கன அடி தண்ணீரும் வந்தது. மொத்தத்தில் அணைகளுக்கு வினாடிக்கு 1,225 கன அடி தண்ணீர் வருகிறது.
நேற்று முன்தினம் 23.25 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நேற்று 2¾ அடி உயர்ந்து அதாவது 25.95 அடியாக உயர்ந்தது.