குறையத் தொடங்கிய வெப்பத்தின் தாக்கம்: தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அனேக இடங்களில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2024-05-15 00:03 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்துக்கு மத்தியில் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவுவதால், இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழையும், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுதவிர, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோல், 18-ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கோடை மழை பரவலாக பெய்ய உள்ளதால், தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக உள் மாவட்டங்களில்தான் வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது அந்த பகுதிகளில்கூட வரும் நாட்களில் வெப்பம் படிப்படியாக குறையக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் இன்று மட்டும் இயல்பைவிட 5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரித்து காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்