ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம்

ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கி உள்ளது. இதனால் கடுங்குளிரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2022-12-24 18:45 GMT

ஊட்டி,

ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கி உள்ளது. இதனால் கடுங்குளிரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

உறைபனி தாக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. சீதோஷ்ண காலநிலை மாறுபாடு காரணமாக, நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. இதனால் தற்போது பனிக்காலமும் தாமதமாக தொடங்கி உள்ளது.

கடந்த மாதம் 15-ந் தேதி முதல் ஒரு வாரம் நீர் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து நவம்பர் 22-ந் தேதி ஊட்டியில் உறைபனி தாக்கம் தொடங்கியது. அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் உறைபனி தாக்கம் இல்லாமல் இருந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

குளிர் காய்கின்றனர்

இந்தநிலையில் ஒரு மாதத்துக்கு பின்னர் ஊட்டியில் நேற்று முதல் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கி உள்ளது. அதிகாலையில் ஊட்டி தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, பைக்காரா, குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் உள்ள புல்வெளியில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. இது வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சி அளித்தது. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீது உறைபனி கொட்டி கிடக்கிறது. இதனால் சூரிய வெளிச்சம் வரும்போது, உறைபனி கரைந்து ஆவியாக மாறி வருகிறது. தற்போது ஊட்டியில் பகலில் வெயில் அடித்து வருகிறது. மாலை முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஊட்டியில் நிலவும் கடுங்குளிரை போக்க பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிகின்றனர். வழக்கத்தை விட தண்ணீர் அதிகமாக குளிர்வதால், சூடான தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். சிலர் குளிரை தாங்க முடியாமல் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

7 டிகிரி செல்சியஸ்

இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. அடுத்த சில வாரங்களில் மைனஸ் டிகிரியை வெப்பநிலை எட்டலாம். அதே சமயத்தில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 71 சதவீதமாக இருந்தது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்