ஜமாபந்தியில் மனுக்களுக்கு உடனடி தீர்வு
ஜமாபந்தியில் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காரைக்குடி
ஜமாபந்தியில் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஜமாபந்தி
காரைக்குடி தாலுகா அலு வலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் சாக்கோட்டை பிர்க்காவிற்கான மனுக்களை பெற்று கிராம கணக்குகளை ஆய்வு செய்தார். 55 மனுக்கள் வரப்பட்டதில், உடனடி தீர்வாக 4 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவும், 3 நபர்களுக்கு கணினி திருத்த உத்தரவும், ஒரு நபருக்கு சாதி சான்றிதழும் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் நேற்று கல்லல் வருவாய் பிர்க்காவிற்கும், இன்று(வியாழக்கிழமை) காரைக்குடி பிர்க்காவிற்கும் நாளை பள்ளத்தூர் பிர்க்காவிற்கும், 4-ந் தேதி மித்திராவயல் பிர்க்காவிற்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் பட்டா மாறுதல், கணினி திருத்தம் மனு, முதியோர் உதவித்தொகை மனுக்களை வருவாய் கோட்டாட்சியரிடம் மனுவாக அளிக்கலாம். இந்த தகவலை காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் தெரிவித்தார். அப்போது சாக்கோட்டை மண்டல துணை தாசில்தார் முபாரக் உசேன், தலைமை நில அளவர் பிச்சு மணி, வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
இளையான்குடி தாலுகா
இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ரத்தினவேல் தலைமை வகித்தார். தாசில்தார் அசோக் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பொதுமக்களால் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழரசி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பட்டா மற்றும் குடும்ப அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தனி தாசில்தார் பஞ்சவர்ணம், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், விவசாய அணி காளிமுத்து, ஒன்றிய நிர்வாகிகள் கருணாகரன், ராஜபாண்டி, நீலமேகம், ராஜேந்திரன், கவுன்சிலர் சாத்தையா, ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.