பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை

வேலூர் மாநகராட்சி பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகுதி சபை கூட்டத்தில் மேயர் சுஜாதா கூறினார்.

Update: 2022-11-01 17:43 GMT

வேலூர் மாநகராட்சி பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகுதி சபை கூட்டத்தில் மேயர் சுஜாதா கூறினார்.

பகுதி சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தையொட்டி வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 36,37,38,46 ஆகிய வார்டுகளுக்கான பகுதி சபை கூட்டம் வேலூர் ஓல்டுடவுன் சமுதாய கூடத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், 3-வது மண்டலக்குழு தலைவர் யூசுப்கான், உதவி கமிஷனர் பிரபுகுமார்ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் கங்கா வரவேற்றார்.

கூட்டத்துக்கு வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கிராமப்பகுதிகளில் மட்டுமே நடைபெற்று வந்த கிராம சபை கூட்டம் தற்போது நகர பகுதியில் பகுதி சபை கூட்டமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வார்டு மக்களை தேடி அந்தந்த கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து அவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில் உங்களின் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்கலாம் அல்லது மனுவாக அளிக்கலாம். பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக...

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிகளில் பகுதி சபைகளை ஏற்படுத்தி மக்களின் குறைகளை தீர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். பொதுமக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லையென்றால் வார்டு கவுன்சிலர், மேயர், கமிஷனர் அல்லது என்னிடம் தகவல் தெரிவிக்கலாம். 36-வது வார்டில் உடற்பயிற்சி கூடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டித்தரப்படும். அதனை முறையாக பராமரிக்க வேண்டும். இந்த 4 வார்டுகளில் ரூ.2½ கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது என்றார்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் திருப்பாவை, மாலதி, கணேஷ்சங்கர், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், மாரியப்பன், வருவாய் ஆய்வாளர் குமரவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்