பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-05 11:44 GMT

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் தொல்லை மற்றும் சைபர் கிரைம்குற்றங்களால் பாதிக்கப்படும் ெபண்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

மாற்றத்தை தேடி கலந்துரையாடல்

எட்டயபுரத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், "மாற்றத்தைத்தேடி" என்னும் தலைப்பில் போலீஸ்துறை சார்பில் பொதுமக்களுடன் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமை தாங்கினார். எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எட்டயபுரம் பகுதியில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில், புதிதாக நிறுவப்பட்டுள்ள 23 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்து போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-

சாலை விபத்துகளை...

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவில் சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. விபத்துக்களை குறைப்பதே எனது முதல் நோக்கம். அதற்காக வான ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிந்து செல்வது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போலீசார் சார்பில் போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்க அறிவுறுத்தல் வழங்குதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

பெற்றோர்களும், தங்களது பிள்ளைகளிடம் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து, கவனமாக செல்ல வேண்டும் என எச்சரிக்க வேண்டும்.

பெண்களின் புகார் மீது...

பெண்கள் பாலியல் மற்றும் சைபர் கிரைம் தொந்தரவுகளால் பாதிக்கப்படும்போது எதற்கும் பயப்படாமல் காவல்துறையை அணுக வேண்டும். இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுதரப்படும். மேலும், குற்ற சம்பவங்களை குறைப்பதில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.

உறுதிமொழி ஏற்பு

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், ஆட்டோ, வேன் டிரைவர்கள், வர்த்தக சங்கத்தினர் பொது அமைதிக்கும், போலீசாருக்கும் முழு ஒத்துழைப்பு தந்து அமைதியான சூழல் நிலவ நடப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், எட்டையபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து விஜயன், முருகன் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்