சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்

சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்

Update: 2022-12-07 18:45 GMT

அன்னூர்

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஒருபிடி மண்ணைக்கூட எடுக்கவிட மாட்டேன் என்றும், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அன்னூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.

சிப்காட் தொழிற் பேட்டை

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3731 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பா. ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை அன்னூரில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

வியாபாரம் செய்ய முயற்சி

அன்னூரில் உள்ள விவசாய நிலங்களை எடுப்பதற்கு தி.மு.க.அரசு அவசர அவசரமாக கடந்த மாதம் 10-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவே முதல் ஏமாற்று வேலை. இங்குள்ள விவசாயிகள், விவசாய அமைப்புகள் அனைவரும் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். இங்கு உள்ள விவசாயிகளுக்கு விவசாயமே வாழ்வாதாரம். அவர்களின் முன்னோர்கள் முதல் விவசாயத்தையே குலதெய்வமாக வழிபட்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு விவசாயத்தை நிறுத்தி விட்டு, தண்ணீரை வைத்து வியாபாரம் செய்ய முயற்சி செய்கிறது. மத்திய அரசின் கணக்குப்படி தமிழகத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கு 48,195 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் தொழிற்சாலைகளை அமைக்காமல் விவசாயம் நடக்கும் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க முற்படுவது ஏன்?

முதல்-அமைச்சர் யோசிக்க வேண்டும்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல நாங்குநேரியில் 2518 ஏக்கர் நிலப்பரப்பை தொழிற்சாலை அமைப்பதற்கு எடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தருவதாக கூறி தி.மு.க. அரசு அங்கு தொழிற்பேட்டைகளை அமைத்தது. ஆனால் தற்போது அங்கு ஒரு தொழிற்சாலை கூட இயங்கவில்லை என்பது தான் உண்மை. கோவையை பொறுத்தவரை 12 விதமான தொழில்களும், அது சார்ந்த தொழிற்சாலைகளும் சிறப்பாகவே இயங்கி வருகிறது.அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரை தென் மாநிலங்களிலேயே தமிழகம் தான் மிகக் குறைவு. 76 ஆயிரம் கோடி மட்டுமே இங்கு அந்நிய முதலீடு வந்துள்ளது.

தமிழகத்தில் கோவையை காட்டிலும் மற்ற மாவட்டங்களில் தரிசு நிலங்கள் அதிகமாக உள்ளது. அந்த இடங்களில் தொழிற்சாலை அமைக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு தி.மு.க.அரசு இங்குள்ள விவசாயத்தை நசுக்குவதற்காக பித்தலாட்டம் செய்கிறது. விவசாயத்தை நசுக்கி தொழில்பேட்டை அமைப்பதில் என்ன லாபம், மக்களின் பிரச்சினையை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை முதல்-அமைச்சர் யோசிக்க வேண்டும்.

பிரதமர் கேட்டார்

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள தமிழ் அமைப்பினர் பாரத பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். இதற்கு காரணம் தமிழையும், தமிழர்களையும் நேசிக்கும் ஒரு தலைவராக பிரதமர் மோடி விளங்கி வருகிறார். நாங்கள் காசியில் தமிழ் சங்கமத்திற்கு முதல் முறையாக சென்று வந்த போது அங்கு உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி வரிசையில் வந்து எங்களை வரவேற்றார்.

தமிழ் மொழியை என் உயிர் மொழியாக நேசிக்கிறேன். ஆனால் மற்ற மொழியை நான் நேசிக்க வேண்டும் என்பதை அங்கு போனபின் தான் கற்றுக் கொண்டேன். நான் கடந்த வாரம் டெல்லி சென்ற போது அங்கு பிரதமர் என்னை நேரில் சந்தித்து தமிழகத்தில் இருந்து காசி சங்கமத்திற்கு எத்தனை பேர் வந்தார்கள் ? கடும் குளிர்காலமாக இருக்குமே, அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருந்தார்கள்? அவர்களுக்கு உணவெல்லாம் சரியாக கிடைத்ததா? என்று பல்வேறு கேள்விகளை கேட்டார். அதை கண்டு நான் உண்மையில் வியந்து போனேன்.

சாகும்வரை உண்ணாவிரதம்

தமிழையும், தமிழர்களையும் நேசிக்கும் ஒரு தலைவராக பாரத பிரதமர் மோடி விளங்கி வருகிறார். ஆனால் இங்குள்ளவர்கள் நாடகமாடுகிறார்கள் என்பது காசிக்கு வந்தவர்களுக்கு நன்றாக தெரியும். தற்போது மத்திய அரசுக்கு போட்டியாக காசி யாத்திரையை தொடங்குவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தற்போது அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அங்கு சென்றால் கடும் குளிர் இருப்பதால், அவர்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாவார்கள்.

இப்போது நான் உங்கள் முன் ஒரு சவால் வைக்கிறேன். அன்னூரில் விவசாய நிலத்தில் ஒருபிடி மண்ணை மாநில அரசு எடுக்குமானால் நான் இங்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒருபிடி மண்ணைக் கூட இங்கிருந்து எடுக்க விடமாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் செந்தூர் முருகேசன், வெள்ளிங்கிரி மாவட்ட செயலாளர்கள் ஏ.பி. ஜெயபால், சாந்தி, கோவை மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் சதீஷ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் யோகேஷ், ஒன்றிய தலைவர்கள் திருமூர்த்தி, ரத்தினசாமி, காடுவெட்டிபாளையம் முன்னாள் தலைவர் சதாசிவன், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரேவதி, சின்னவேடம்பட்டி பாபு உள்பட மாவட்ட ஒன்றிய, பகுதி, பேரூர் கழக, ஊராட்சி நிர்வாகிகள், விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்