அரசு திட்டங்கள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் அலுவலர்களிடம் கேட்டறிந்து பயன்பெறுங்கள் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

அரசு திட்டங்கள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் அலுவலர்களிடம் கேட்டறிந்து பயன்பெறுங்கள் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.;

Update: 2023-02-17 08:37 GMT

மனுநீதி நாள் முகாம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வில்லிவலம் கிராமத்தில் தமிழக அரசு உத்தரவின்படி வாலாஜாபாத் பிர்காவுக்கு உட்பட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா முன்னிலையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கலந்து கொண்டார்.

மனுநீதி நாள் முகாமையொட்டி கடந்த 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வருவாய் ஆர்.டி.ஓ. முகாமிட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

நலத்திட்ட உதவிகள்

அதனை முறையாக பரிசீலித்து ஆய்வு செய்து, பெறப்பட்ட மனுக்களில் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் சிறப்பு சக்கர நாற்காலி ஒருவருக்கும், வருவாய்த்துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா 53 நபர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான நத்தம் வீட்டுமனை பட்டா 61 நபர்களுக்கும், ரேஷன்கார்டு 25 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் மகளிர் சுயஉதவி வங்கி கடன் 2 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் விலையில்லா இலவச தையல் எந்திரம் 3 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் தொழில்துறை மூலம் தொழில்கடன் 5 நபர்களுக்கும், தாட்கோ துறை மூலம் திருமண உதவி மற்றும் கல்வி உதவி 4 நபர்களுக்கும், வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருட்கள் 5 நபர்களுக்கும், தோட்டகலைத்துறை மூலம் சொட்டுநீர் பாசனம் நாற்றுகள் மற்றும் விதைகள் 4 நபர்களுக்கும், கூட்டுறவுதுறை மூலம் பயிர்க்கடன், சுயஉதவிக்குழு கடன் 8 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் 10 நபர்களுக்கும் என மொத்தம் 181 பயனாளிகளுக்கு ரூ.93.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

பின்னர் முகாமில் கலந்து கொண்ட கிராம மக்களிடையே மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பேசியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு

பின்னர் வில்லிவலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்படும் சத்துணவு சமையல் கூடத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அங்கு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தன்மையை ஆய்வு செய்தார். மேலும் வில்லிவலம் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையை பார்வையிட்டு கிராம மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும் உணவு பொருட்கள் இருப்பு பதிவேட்டையும் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு, வாலாஜாபாத் தாசில்தார் சுபப்ரியா, தனி தாசில்தார் ரமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்