அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம்-திரைப்பட நடிகர் ஜீவா பேச்சு
அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம் என திருவண்ணாமலையில் நடந்த 21-வது தேசிய அளவிலான இளையோர் தடகளப்போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் ஜீவா கூறினார்.
அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம் என திருவண்ணாமலையில் நடந்த 21-வது தேசிய அளவிலான இளையோர் தடகளப்போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் ஜீவா கூறினார்.
தேசிய அளவிலான தடகள போட்டி
திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் 21-வது தேசிய அளவிலான இளையோர் தடகளப்போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
இதில் 28 மாநிலங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டி பகல், இரவாக நடைபெற்று வருகின்றது. இதில் 100 மீட்டர், 500 மீட்டர், 1500 மீட்டர் உள்ளிட்ட ஓட்ட பந்தயங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் என்பன உள்ளிட்ட 40 வகையான போட்டிகள் இடம் பெற்றுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி பேசினார். துரோணாச்சார்யார் விருது பெற்ற ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், அருணை மருத்துவக்கல்லூரி டீன் குணசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தடகள சங்க செயலாளர் லதா வரவேற்றார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
எந்த இலக்கையும் அடையலாம்
விழாவில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டு போட்டிக்கான ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் பேசியதாவது:-தமிழக விளையாட்டு வீரர்கள் ஆசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர். இந்திய அணியில் தமிழக வீரர்கள் அதிகளவில் இடம் பெறுகின்றனர். தடகள சங்கம் சார்பில் மேலும் இது போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி தடகள வீரர்களை உருவாக்க வேண்டும். இதற்கு திரை துறையின் சார்பில் எப்பொழுதும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். தமிழகத்தில் விளையாட்டு துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்தியாவிற்கு முன்உதாரணமாக தமிழ்நாடு உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் தற்போது கிடைத்து வருகின்றது. விளையாட்டு வீரர்கள் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதிகளவில் டி.வி.யையும், செல்போனையும் பார்க்கக் கூடாது.
உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவை இருந்தால் எந்த இலக்கையும் அடையலாம். இந்த நாள் திரும்பவும் வராது. இந்த நாட்களை அனுபவித்து வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்
தொடர்ந்து அவர் நேற்று காலையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினார். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி நன்றி கூறினார்.
இப்போட்டிகள் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. இந்த தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஜூன் மாதத்தில் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்க புள்ளிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.