கிராமசபை கூட்டத்தில் பிரச்சினை செய்தால் நடவடிக்கை
பட்டியலின தலைவர்கள், பெண்கள் தலைமை ஏற்கும் கிராமசபை கூட்டங்களில் பிரச்சினை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிராமசபை கூட்டம்
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும்.
பிரச்சினை செய்தால் நடவடிக்கை
அதேபோன்று தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, பள்ளி இடைநிறுத்தம், குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை ஒழிப்பு, பள்ளி மேலாண்மைக்குழு கூட்ட தீர்மானங்கள், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு, இதரப்பொருட்கள் பற்றி கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கிராமசபை கூட்டங்களில் பட்டியலின தலைவர்கள் மற்றும் பெண்கள் தலைமை ஏற்கும் ஊராட்சிகளில் ஏதேனும் பிரச்சினை செய்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிராமசபை கூட்டங்களில் அனைத்துறை உயர் அலுவலர்கள், பார்வையாளர்களாக கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள், சிறப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.