முஸ்லிம்-கிறிஸ்தவ மக்களுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க.தான்- எடப்பாடி பழனிசாமி

முஸ்லிம்-கிறிஸ்தவ மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க.தான் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-02-16 22:13 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2 நாட்களாக ஓட்டு கேட்டு வருகிறார்.

2-வது நாளான நேற்று அவர் கனிராவுத்தர் குளம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து பி.பி.அக்ரகாரம் வண்டிப்பேட்டை, நெரிக்கல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுகள் கேட்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

பச்சை பொய்

அவர் வண்டிப்பேட்டை, நெரிகல்மேடு பகுதிகளில் பேசும்போது கூறியதாவது:-

தேர்தல் முறைகேடுகள் குறித்து இங்குள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரி ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று ஊடகங்களில் தெரிவித்து உள்ளார். நாங்கள் அனைத்து புகார்களுக்கும் உரிய பதிவுகளை வைத்து இருக்கிறோம். கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருகிறபோது வழங்குவோம்.

அ.தி.மு.க. வெற்றிபெறும்

தேர்தல் என்றால் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், இங்கு அதிகாரிகள் ஆளும் கட்சியின் எடுபிடிகளாக செயல்படுகிறார்கள். அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்வது, எதிர்க்கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே.

வாக்காளர்கள் கொட்டகைகளில் ஆடு, மாடுகளை போல அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்படுவதை காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். இதுபோன்று வாக்காளர்களை அடைத்து வைப்பது கொடும் குற்றம் என்று எச்சரிக்கிறேன். எப்படி நீங்கள் அடைத்து வைத்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

தேர்தல் அறிக்கையில்...

கொரோனா பேரிடர் காலத்தில் தொழிலாளர்கள் குடும்பங்கள் உணவுக்கு சிரமப்படக்கூடாது என்று 10 மாதங்கள் ரேஷன்கடைகளில் அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்கியது அ.தி.மு.க. அரசு. அம்மா உணவகங்களில் சுடச்சுட 3 வேளை உணவு இலவசமாக அளித்தது அ.தி.மு.க. அரசு. பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 பொங்கல் தொகுப்பு, பின்னர் ரூ.2,500 வழங்கியது அ.தி.மு.க. அரசு. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.2,500 போதாது, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார். அவர் இப்போது ஆட்சியில் இருக்கிறார். ரூ.5 ஆயிரம் கொடுத்தாரா?. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படும் என்றார் கொடுத்தாரா?. கியாஸ் மானியம் ரூ.100 தருவேன் என்றார் தந்தாரா?. தரவில்லை.

ரகசியத்தை கேளுங்கள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றார். 21 மாதம் ஆகிவிட்டது. இந்த இடைத்தேர்தலிலாவது அந்த ரகசியத்தை கூறுங்கள் என்று கேளுங்கள்.

முஸ்லிம் மக்களுக்காக நாங்கள் நிறைய திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம். தி.மு.க. ஏதேனும் திட்டம் கொண்டு வந்திருக்கிறதா?. எங்களை பொறுத்தவரை இந்த மண்ணில் பிறந்த முஸ்லிம்-கிறிஸ்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கும் கட்சி அ.தி.மு.க.தான்.

இவ்வாறு எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

இதற்கிடையே எஸ்.பி.சி. கிறிஸ்தவ அமைப்பு பேராயர்கள் மற்றும் நிர்வாகிகள் வில்லரசம்ட்டியில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஈரோடு கிழக்கு தேர்தலில் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்