தரத்தில் குறைபாடு இருந்தால் வாட்ஸ் அப்பில் புகார் செய்யலாம்

நுகர்வோர் வாங்கும் திரவ உணவு பொருட்களின் தரத்தில் குறைபாடு இருந்தால் வாட்ஸ் அப்பில் புகார் செய்யலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-22 12:33 GMT


நுகர்வோர் வாங்கும் திரவ உணவு பொருட்களின் தரத்தில் குறைபாடு இருந்தால் வாட்ஸ் அப்பில் புகார் செய்யலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திரவ ஆகாரங்கள்

கோடை காலம் தற்போது தொடங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகும்.

இந்த தேவைகளை பூர்த்தி செய்ய புதிய வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனவே கோடைகால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை www.foscos.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.

பழரசம், சர்பத், கம்மங்கூழ் தயாரிக்க பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும்.

மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.

பில் வைத்திருக்க வேண்டும்

உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். திரவ ஆகாரங்களை தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை தயாரித்த பின்னர் அதிக நேரம் இருப்பு வைத்திருக்க கூடாது.

கம்மங்கூழ் போன்ற உணவுப்பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும். திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது.

குளிரூட்ட உணவுத்தர ஐஸ் கட்டியைப் பயன்படுத்த வேண்டும், உணவுத்தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமல் இருக்க வேண்டும்.

தரமில்லாத ஐஸ் கட்டி நீல நிறத்தில் இருக்கும். ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதையும் உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை வைக்கோல், சணல்பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது. குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பைதொட்டிகளை உபயோகிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்

அதே போன்று நுகர்வோர் கடையில் திரவ உணவு பொருட்களை வாங்கும் போது, கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கெட்டு போகும் நிலையில் பொருட்கள் இருந்தால் அதனை தவிர்க்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும். நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப்பொருட்களின் தரத்தில் குறையோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் 9444042322 என்ற பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்