குமரி மாவட்ட கோரிக்கைகளை ரெயில்வே துறை புறக்கணித்தால் அடுத்தக்கட்ட போராட்டம்; விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை
குமரி மாவட்ட கோரிக்கைகளை ரெயில்வே துறை புறக்கணித்தால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.
நாகா்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் குமரி மாவட்ட மக்களின் சார்பாக ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே துறையினரிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரெயில்வே துறையால் குமரி மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து எனது (விஜய்வசந்த் எம்.பி.) தலைமையில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில், ஐதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ரெயில்வே துறையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குமரி மாவட்டத்தை ரெயில்வே நிர்வாகம் புறக்கணிக்கும் நடவடிக்கை தொடர்ந்தால், மீண்டும் எனது தலைமையில் அடுத்தக்கட்ட போராட்டங்களை காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.