பிடிபடும் மாடுகளுக்கு அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் விடப்படும்

சாலையில் சுற்றித்திரியும்போது பிடிபடும் மாடுகளுக்கு அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் விடப்படும் நகரமன்ற தலைவர் எச்சரிக்கை

Update: 2022-11-25 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் நகரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து, விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் கட்டி வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறாா்கள். இந்த மாடுகளை நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் மோகன், டாக்டர் சேகர் ஆகியோர் பார்வையிட்டு மாடுகளுக்கு புல், தீவனங்களை வழங்கினர்.

பின்னர் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி கூறுகையில், விழுப்புரம் நகர சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் தீவனங்கள், புல், புண்ணாக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கால்நடைத்துறை மூலம் மாடுகள் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் 3 நாட்களுக்குள் ரூ.5 ஆயிரம் அபராதமாக செலுத்தி மாடுகளை மீட்டுச்செல்லலாம். இல்லையெனில் சந்தையில் ஏலம் விடப்பட்டு அந்த தொகை நகராட்சி கருவூலக்கணக்கில் செலுத்தப்படும். இனிவரும் நாட்களிலும் தினந்தோறும் மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே சாலையில் மாடுகளை கட்டவிழ்த்து விடக்கூடாது, மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார். இந்த ஆய்வின்போது தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற கவுன்சிலர் உஷாராணி மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்