தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார்முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

Update: 2023-02-13 19:30 GMT

தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

வாக்கு சேகரிப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று, அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.வி.ராமலிங்கம், பொன்னையன், கோகுல இந்திரா, த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் ஆகியோர், ஈரோடு வீரப்பன் சத்திரம் சாந்தான் காடு, ஜான்சி நகர், பெரியவலசு, முனிசிபல் காலனி, பாப்பாத்திக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடினர். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

வெற்றி உறுதி

முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோகமாக வரவேற்கிறார்கள். இதை பார்க்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெறுவது உறுதி. ஈரோடு மாவட்டத்தில் அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான். அனைத்து மக்களுக்கும் ஓடோடி வந்து பணியாற்ற கே.எஸ்.தென்னரசு தயாராக இருக்கிறார்.

கடந்த 21 மாத ஆட்சியில் தி.மு.க. அரசு சொல்லக்கூடிய வகையில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

தகுதி நீக்கம்

பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். பெண்களுக்கு உரிமை தொகை இதுவரை தரவில்லை. இதேபோல் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சொத்து வரி, பால் விலை உயர்வு இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். விதிகளை மீறி தி.மு.க. செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

இந்த தேர்தல் வெற்றி என்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமன்றி, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்- அமைச்சராக பொறுப்பேற்பார். அதற்கு இந்த இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்ற அடித்தளமாக இருக்கும்.

அப்போது அவருடன் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் எம்.பி. தியாகராஜன், அ.தி.மு.க. பகுதி செயலாளர் கேசவமூர்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்