செம்பூர் ரெயில்வே கேட்நிரந்தரமாக மூடப்பட்டால் மக்களுடன் சேர்ந்து போராடுவேன்: ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. உறுதி
செம்பூர் ரெயில்வே கேட்நிரந்தரமாக மூடப்பட்டால் மக்களுடன் சேர்ந்து போராடுவேன் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. உறுதி
தென்திருப்பேரை:
செம்பூர் ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டால் மக்களுடன் சேர்ந்து போராடுவேன் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
ரெயில்வே கேட் விவகாரம்
நெல்லை- திருச்செந்தூர் வழித்தடத்தில் இயங்கும் ரெயில்கள் வந்து செல்லும் செம்பூர் பஸ் நிறுத்தம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் வழியாக நாசரேத்,உடன்குடி,சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் சென்று வருகின்றன. அருகில் 2 ரெயில்வே கேட் இருப்பதால் செம்பூர் கேட்டை நிரந்தரமாக மூடிவிட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனால் செம்பூர் பகுதி மக்கள் 6 கி.மீ. சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ெரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ரெயில்வே கேட் அருகே போராட்டத்திற்காக திரண்டு இருந்த பொதுமக்களை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்களின் கோரிக்கை குறித்து கனிமொழி எம்.பி. மூலம் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று ரெயில்வே கேட் மூடப்படுவதை தடுத்து நிறுத்துவதாக உறுதி அளித்தார். அதேசமயம், பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் பொதுமக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இலவச சைக்கிள்
மேலும், ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் அரசு முத்துமாலை அம்மன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 115 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். தொடர்ந்து அவர் சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 90 பேருக்கு சைக்கிள் வழங்கினார்.
சாயர்புரம்
சாயர்புரம் தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலாஏப்சிபாய் வரவேற்றார். சாயர்புரம் சேகர குரு இஸ்ரேல்ராஜாதுரைசிங் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதேபோல சாயர்புரம் ஜி. யு.போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ. வழங்கினார்.