எய்ம்ஸ் திட்டப்பணி தொடங்காவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் எய்ம்ஸ் திட்டப்பணி தொடங்காவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.;

Update: 2023-10-22 19:22 GMT

விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ரூ. 61 கோடி ஊதியநிலுவை உள்ளது. இதனால் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு இந்த தீபாவளி கருப்பு தீபாவளியாக இருக்க வாய்ப்புள்ள நிலையில் மத்திய அரசு உடனடியாக இவர்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை குறிப்பாக விருதுநகர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியை புறக்கணிக்கும் நிலை தொடர்கிறது. விருதுநகர் புறவழிச்சாலையில் சேவை ரோடு, கலெக்டர் அலுவலகம், படந்தால் விலக்கில் மேம்பாலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பாலங்கள் ஆகியவை முடங்கியுள்ளன.இதுகுறித்து வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி தோப்பூரில் அடிக்கல் நாட்டிய பின்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தற்போது டெண்டர் விடப்பட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் மார்ச் மாதம் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவும் தேர்தலையொட்டி மத்திய அரசின் வெற்று அறிவிப்பாகும். இதற்கு தென் மாவட்ட மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். சிவகாசி சாட்சியாபுரம் ெரயில்வே மேம்பாலத்திற்கு ரூ. 68 கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு விட்டது. விரைவில் பணி தொடங்கும்.

சோனியா காந்தி தி.மு.க.வுடன் ஆன கூட்டணியில் குழப்பம் ஏதுமில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார். எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியும் அமோக வெற்றி பெறும்.

மூத்த தலைவர் சங்கரைய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, சிவகுருநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்