கழிவுநீரை பொதுஇடங்களில் விட்டால் கடும் நடவடிக்கை

கழிவுநீரை பொதுஇடங்களில் விட்டால் கடும் நடவடிக்கை

Update: 2023-02-15 19:17 GMT

வீடுகளில் தனியார் வாகனம் மூலம் எடுக்கப்படும் கழிவுநீரை பொதுஇடங்களில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கழிவுநீர்

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் இதர வகை கட்டிடங்களில் இருந்து தனியார் கழிவுநீர் வாகனங்கள் மூலம் எடுக்கப்படும் கழிவுநீரை மாநகராட்சிக்கு சொந்தமான சாலைக்காரத்தெருவில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கிணற்றில் கழிவுநீரை விட வேண்டும்.

இப்படி கழிவுநீரை விடுவிக்க ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு நடை ஒன்றுக்கு கழிவுநீரை விடுவதற்கு ஆயிரம் லிட்டருக்கு கீழ் உள்ள வாகனங்களுக்கு ரூ.200 மட்டுமே. ஆயிரம் லிட்டருக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு நடை ஒன்றுக்கு ரூ.300 கட்டணமாகவும், வருடத்திற்கு ஒரு வாகனத்திற்கு ஒருமுறை மட்டும் பதிவு, புதுப்பித்தல் கட்டணமாக ரூ.2 ஆயிரம் கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

அனைத்து லாரி உரிமையாளர்களுக்கும் சாலைக்காரத்தெருவில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கிணற்றில் கழிவுநீரை விடுவிக்க வேண்டும். பொதுவெளியில் கழிவுநீரை விடக்கூடாது. ஆனால் பல வாகனங்களில் இருந்து பொதுஇடங்களில் கழிவுநீர் விடப்பட்டு வருகிறது. எனவே இனிவரும் காலங்களில் கழிவுநீர் பொதுஇடங்களில் விடப்பட்டால் மாநகராட்சி மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவறும் பட்சத்தில் தங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்