கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் - அன்புமணி ராமதாஸ்
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பல போராட்டங்கள் நடந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களை ஒன்றிணைந்து பா.ம.க., போராடி வருகிறது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு, தி.மு.க., ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என கூறினார்.
தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. பா.ம.க., தொடர்ந்து போராடிய நிலையில்,வேலுார் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. சிறிய மாவட்டங்களாக இருந்தால் தான் நிர்வாகத்திற்கு எளிதாக இருக்கும். எனவே கும்பகோணத்தை விரைவில் தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்கவிட்டால், நானே மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.