நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு இருக்காது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தடுப்புச்சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-20 14:47 GMT

சென்னை,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், கவர்னரை கண்டித்தும், நீட் தேவை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் இந்த உண்ணாவிரத போரட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் தடுப்புச்சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் ஆணவம் பிடித்த கவர்னரை கண்டித்தும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட உண்ணாநிலை அறப்போராட்டம் மாபெரும் வெற்றி.

மாவட்ட கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள், அணிகளின் செயல்வீரர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் பங்கெடுத்தனர்.

நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மக்களின் கோரிக்கையாக இன்று மாறி இருக்கிறது. கட்சி எல்லைகளைக் கடந்து நீட் தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயமாக விலக்கப்படும் என்பது உறுதி; எங்களது புதிய ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது.

ஏழை - எளிய - விளிம்பு நிலை - ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைப்பதுதான் பா.ஜ.க.வின் உண்மையான நோக்கம்.

ஊழலுக்கு எதிரானவர்களை போல நடித்து கொண்டு, தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடிகளில் புரளப்பச்சைக் கொடி காட்டிக் கொண்டிருப்பது மத்திய பாஜக ஆட்சியாகும். இவர்களது ஊழல் வண்டவாளங்கள்தான் சி.ஏ.ஜி. அறிக்கையில் சிரிப்பாய் சிரிக்கிறதே!

நீட் தேர்வை அதிமுக ஆட்சிக்காலம் ஆரம்ப காலத்திலேயே எதிர்த்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. தங்களது நாற்காலி காப்பாற்றப்பட்டால் போதும் யார் நாசமானால் என்ன என்று நினைத்து தரையில் விழுந்து கிடந்தார்கள்.

அரியலூர் அனிதா தொடங்கி - குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்களின் உயிரை குடித்த நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது.

நீட் என்பது ஏதோ மாற்ற முடியாத அரசியலமைப்பு சட்டமல்ல. அரசியலமைப்பு சட்டத்தையே காலில் போட்டு மிதித்தவர்கள் மத்திய பா.ஜ.க.வினர். எனவே, நீட் தேர்வு ரத்தாகும்.

உங்கள் போராட்டம் நமக்கு மேலும் உறுதியை ஏற்படுத்தி இருக்கிறது. நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்