பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடத்தப்பட்டு வருகிறது. இதில் பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறினார்.

Update: 2022-12-16 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய போலீசார், விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள பழைய கஞ்சா குற்றவாளியின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

200 இடங்களில் சோதனை

இதேபோல் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என சந்தேகிக்கும் 200 பேரின் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆபரேஷன் வேட்டையின் முக்கிய நோக்கம், பழைய குற்றவாளிகள் மீண்டும் அந்த செயலில் ஈடுபடக்கூடாது, அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். எங்கேயும் கஞ்சா இருக்கக்கூடாது, இத்தொழிலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பழைய குற்றவாளிகள் மீண்டும் இதுபோன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களது சொத்துக்கள், வங்கி கணக்குகளை முடக்கம் செய்வதோடு அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். அதோடு அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும்.

17 பேர் கைது

நமது மாவட்டத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை கடந்த 12-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை 12 வழக்குகளில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆரோவில், இடையன்சாவடி பகுதிகளில் வீட்டிலேயே எடை எந்திரம் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பழைய கஞ்சா குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா விற்பனை செய்யக்கூடாது என்ற நோக்கில் அவர்களை கண்காணிக்கும் வகையில் இந்த கஞ்சா வேட்டை தொடங்கி நடந்து வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 110 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்