நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எந்த பாதிப்பும் இல்லை-சீமான் பேச்சு
“நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று செங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
செங்கோட்டை:
"நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பு இல்லை" என்று செங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
பொதுக்கூட்டம்
கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தி செல்வதைக் கண்டித்து செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை சிவகுமார் தலைமை தாங்கினார். தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அருண் சங்கர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது:-
பிரதமர் வேட்பாளர்
மலை வளம் மக்களுக்கானது, அது வியாபார பொருள் அல்ல. அதனை எடுத்து அண்டை மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது. ஓட்டு போடுவதற்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல் உருவாகிறது. அவ்வாறு வாக்குகளை பெறுகிறவர்களுக்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துகிற எண்ணம் வராது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 2 நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளது. மாணவர்கள் எல்லா தலைவர்களை பற்றியும் தெரிந்து கொண்டு, நல்ல தலைவர்களின் கருத்துகளை மட்டும் ஏற்க வேண்டும்.
ஊழலைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு அருகதை இல்லை. நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம். கல்வி தரத்தை உயர்த்துவோம். படித்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை கொடுப்போம். பசி பஞ்சம் இருக்காது. நடுத்தர மக்கள் உயர்வதற்கு தொழில் வளத்தை பெருக்குவோம்.
நடிகர் விஜய்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க.வுக்கு துணிவிருந்தால், நாங்கள் கண்டிப்பாக அவர்களை ஆதரிக்கிறோம்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேறு, நான் வேறு. எங்களுக்கு உள்ள பந்தம் அண்ணன்-தம்பி மட்டும்தான். எந்த சலசலப்புக்கும் எங்கள் கட்சியும், தொண்டர்களும் அஞ்ச மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் பசும்பொன், தங்கவேல், துரைமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இசைமதிவாணன், ஹிமாயுன், மாநில மகளிர் பாசறை செயலாளர் சத்யா, மாநில இளைஞர் பாசறை செயலாளர் இரும்பவனம் கார்த்திக் உள்பட பலர் பேசினார்கள். தொகுதி செயலாளர் அழகுசுப்பிரமணியன் நன்றி கூறினார்.