ஐட்ரோஜென்யா கொய்மலர் கொள்முதல் விலை உயர்வு

கோத்தகிரி பகுதியில் ஐட்ரோஜென்யா கொய்மலர் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2023-09-08 23:15 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் ஐட்ரோஜென்யா கொய்மலர் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கொய்மலர் சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கார்னேசன், ஜர்பரா, லில்லியம் போன்ற கொய்மலர்கள் பசுமை குடில்களில் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இந்த மலர்களின் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால், விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர். இந்தநிலையில் நட்சத்திர ஓட்டல்கள், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்ய ஐட்ரோஜென்யா மலர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மலர் செடிகள் வளர ஏற்ற காலநிலை நீலகிரி மாவட்டத்தில் உள்ளதால், தற்போது மலர் சாகுபடி அதிகரித்து வருகிறது. கென்யா, ஆலந்து நாடுகளில் வளரக்கூடிய ஐட்ரோஜென்யா கொய் மலர்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்தனர். தற்போது இந்த மலர்களுக்கு கிராக்கி உள்ளது. கடந்த மாதம் ஒரு மலர் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. தற்போது கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ரூ.120 வரை கொள்முதல்

இதுகுறித்து கோத்தகிரியை சேர்ந்த கொய்மலர் விவசாயி மேகநாதன் கூறியதாவது:-

குடில்களில் மண்ணிற்கு பதிலாக, தேங்காய் நார் மற்றும் உரங்கள் அடங்கிய கலவையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐட்ரோஜென்யா மலர் நாற்றுகளை நடவு செய்து பராமரிக்கிறோம். ஓராண்டில் பூக்கள் பூக்க தொடங்கும். ஒரு முறை இந்த மலர்களை பயிரிட்டால், மாதத்திற்கு ஒரு முறை என 20 ஆண்டுகள் வரை மலர்கள் தொடர்ந்து பூத்து பலன் அளிக்கும்.

தற்போது ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்தங்கள் அதிகமாக இருப்பதால், இந்த மலர்களின் தேவை அதிகரித்து உள்ளது. ஒரு மலருக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. ஒரே செடியில் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா என 3 நிறங்களில் பூக்களை வளர வைத்து பறிக்க முடியும். வெளிநாடுகளை விட இங்கு சாகுபடி செய்யப்படும் மலர்கள் குறைந்த விலையில் கிடைப்பதால், இந்த மலர்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்