மணல் குவியலில் சிக்கி கிடந்த சாமி சிலைகள்

வலங்கைமான் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது மணல் குவியலில் சிக்கி கிடந்த சாமி சிலைகள் மீட்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2022-06-07 18:03 GMT

வலங்கைமான்;

வலங்கைமான் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது மணல் குவியலில் சிக்கி கிடந்த சாமி சிலைகள் மீட்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருேக உள்ள பூந்தோட்டம் ஊராட்சி சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் குமரன். இவருடைய மகன் வெங்கடேசன்(வயது55). இவர் ஆலங்குடி சந்தை வெளி பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வீடு கட்ட இடம் வாங்கினார். இந்த இடத்தில் வீடு கட்ட கடந்த மாதம் 18-ந் தேதி மாலை பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினார்.அப்போது மண்ணுக்கு அடியில் சுமார் 3 அடி உயரமுள்ள உலோக சாமி சிலை இருப்பது தெரியவந்தது. சிலையின் வலது பக்க கை உடைந்த நிலையில் இருந்தது. இந்த சிலை பள்ளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. மேலும் இந்த சிலையுடன் சுமார் 1 அடி உயரம் உள்ள சாமி சிலை, ஒரு பலிபீடம், திருவாச்சி மற்றும் ஒரு சிறிய அளவிலான கலயம் ஆகியவை இருந்தன. இந்த சிறிய அளவிலான கலயத்தில் பூஜை சம்பந்தப்பட்ட 24 பொருட்கள் இருந்தன.

அதிகாரிகள் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும் சிலைகளை கைப்பற்றி வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மணல் குவியல்

இருப்பினும் கடந்த சில தினங்களாக வெங்கடேசன் அந்த இடத்தில் வீடு கட்டும் பணிகளை மீண்டும் தொடங்கினார். இதில் சிமெண்டு தூண்கள் அமைத்து பின்னர் இடைப்பட்ட பள்ளங்களில் பொக்லின் எந்திரம் மூலம் மண்ணை நிரப்பும் பணி நடந்தது. அப்போது ஏற்கனவே அள்ளி மேல் பக்கமாக கொட்டப்பட்டிருந்த மண்ணை எடுத்து பள்ளத்தில் நிரப்பிய போது இந்த மணல் குவியல்களுக்கிடையே சுமார் ஒரு அடி உயரமுள்ள பெருமாள் சிலை, ¾ அடி உயரமுள்ள பூமா தேவி, ஸ்ரீ தேவி சிலைகள் மற்றும் சில சாமி சிலைகளின் பாகங்கள் புதைந்து இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த சிலைகள் கடந்த மாதம் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது பூமிக்கு அடியில் இருந்து மணலோடு கலந்து வௌியே வந்து மணல்குவியல்களுக்கிடையே சிக்கி யாருக்கும் தெரியாமல் இருந்தது தெரியவந்தது.

தொல்லியல் துறை ஆய்வு

இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டார். பின்னர் அனைத்து சாமி சிலைகளும் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது. சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு தொல்லியல் துறையின் மூலம் விரிவான ஆய்வு செய்து, முற்காலத்தில் கோவில் இந்த பகுதியில் புதையுண்டு உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்