பாலதண்டாயுதபாணி ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட பாலதண்டாயுதபாணி ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலையை சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Update: 2022-11-07 21:16 GMT

திருவிடைமருதூர்;

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட பாலதண்டாயுதபாணி ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலையை சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சோதனை

தமிழகத்தின் பல பகுதிகளில் உலோகச்சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் என்று ஏமாற்றி வெளிநாடுகளுக்கு சிலர் விற்பனை செய்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் தனிப்படை போலீசார் சிலையை வாங்குபவர்கள்போல் நடித்து பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை உக்கடம், செல்வபுரம் பைபாஸ் ரோடு யோக சாஸ்தா கார்டனில் பழமையான தொன்மையான சிலைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்அனுமதி பெற்று கோவையில் உள்ள யோகசாஸ்தா கார்டனில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனை செய்தனர்.

ஐம்பொன் சிலை பறிமுதல்

இந்த சோதனையில் பழமையான பாலதண்டாயுதபாணி ஐம்பொன்சிலை அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சிலை சம்பந்தமாக அங்கிருந்த பாஸ்கர்(வயது 42) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் பாலதண்டாயுதபாணி சிலையை தனது பொறுப்பில் வைத்திருப்பதாகவும், அதற்கான எந்த ஆவணமும் தன்னிடம் இல்லை என்றும் போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து 300 கிலோ எடையுள்ள பாலதண்டாயுதபாணி சிலையையும், திருவாச்சியையும் போலீசார் பறிமுதல் செய்து கோவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

ஒப்படைப்பு

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த 300 கிலோ எடையுள்ள பாலதண்டாயுதபாணி சிலை மற்றும் திருவாச்சியை நேற்று கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் ஒப்படைத்தனர். உலோகச்சிலையின் தொன்மை தன்மையை இந்திய தொல்லியல்துறை அறியவேண்டியுள்ளதால் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இந்த சிலையை பாதுகாப்பாக ஒப்படைக்க நீதிபதி சண்முகபிரியா உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து போலீசார் பாலதண்டாயுதபாணி சிலை மற்றும் திருவாச்சியை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்