கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக பணியாற்றுவேன் - ஆர்.பி.உதயகுமார்

ஜெயலலிதா இருக்கும் போது விசுவாசமாக பணியாற்றியது போல் பணியாற்றுவேன் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Update: 2022-07-19 13:27 GMT

சென்னை,

தமழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும், எதிர்க்கட்சி துணை செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடனடியாக எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதைத் தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

சாமானிய முதல்-அமைச்சராக சரித்திர சாதனை படைத்திட்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சாமானிய தொண்டனாகிய என் மீது கனிவும், பரிவும் கொண்டு, ஜெயலலிதாவின் மறுவடிவமாக இந்த வரலாற்று வாய்ப்பினை தெய்வ உள்ளத்தோடு வழங்கி இருக்கிறார்.

அவரது நம்பிக்கைக்கு உரியவனாகவும், தலைமைக்கும், கட்சிக்கும் ஜெயலலிதா இருக்கும் போது எப்படி விசுவாசமாக பணியாற்றினோமோ அவ்வாறு பணியாற்றுவேன். சட்டமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக தி.மு.க. அரசை, துள்ளிவரும் வேலாக துளைத்து எடுக்கும் பணியை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.

இந்த வாய்ப்பை தந்தமைக்காக, கோடான கோடி நன்றியை காணிக்கையாக்கி நன்றியை வார்த்தையால் சொல்லாமல் வாழ்வில் வாழ்ந்து காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்