'அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துவேன்'

'என்னிடம் நாட்டை கொடுத்தால் அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துவேன்' என்று போடியில் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

Update: 2023-07-05 20:15 GMT

சீமான் பேட்டி

தேனி மாவட்டம் போடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி, கட்சியை பலப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார்.

முன்னதாக நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொது சிவில் சட்டத்தால் எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை. நாட்டில் கவனம் செலுத்துவதற்கு கல்வி, மருத்துவம், சாலை அமைத்தல், பராமரித்தல், மின்உற்பத்தி வினியோகம் என எவ்வளவோ இருக்கிறது. இந்த சட்ட திருத்தத்தால் நாட்டுக்கு என்ன நன்மைகள் என்று ஒரு மாதிரியை காட்டட்டும். பிறகு விவாதிப்போம்.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூரில் பிரதமர், முதல்-அமைச்சருக்கு தெரியாமல் கலவரம் நடக்கிறதா? காஷ்மீர், ஈழத்தில் என்ன நடந்ததோ, அதுதான் மணிப்பூரிலும் நடக்கிறது. மணிப்பூரில் நடக்கும் கலவரம் என்பது அங்குள்ள காடுகளில் வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றிவிட்டு அங்குள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக நடத்தப்படுகிறது. என்னிடம் நாட்டை கொடுங்கள். அரை மணி நேரத்தில் மணிப்பூர் கலவரத்தை நிறுத்துகிறேன்.

தி.மு.க. மாநில சுயாட்சி பேசிய கட்சி. ஆனால், இப்போது உயர் போலீஸ் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர் என யாராவது ஒருவர் தமிழர் இருக்கிறாரா? இந்த பதவிகளை பொறுப்போடு நிர்வகிக்க ஒரு தகுதியுள்ள தமிழர் கூட இல்லையா? இனி நேரடியாக பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.

15 முறை மின்தடை

கேரளாவில் துறைமுகம் கட்டுவதற்கு, தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவிலும் மலை இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு தேவையான கனிம வளங்களை ஏன் அங்கேயே எடுத்துக் கொள்வது இல்லை? மலைகளை அழித்துவிட்டால் திரும்ப உருவாக்க முடியாது.

போடியில் நான் தங்கியிருந்த அறையில் 15 முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டது. மின் கட்டணம் ஒருபுறம் ஏறிக் கொண்டு போகிறது. மின் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. தடையின்றி மின்சாரம் கொடுக்க எந்த திட்டமும் இல்லை. மின் உற்பத்தியில் முதலீடு செய்யாமல், மின்சாரம் வாங்குவதில் கவனம் செலுத்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று சீமானிடம் நிருபர்கள் கேட்டதற்கு, 'நான் ஏன் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் அரசியலுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிறது. நீங்கள் அவரிடம் (விஜய்யிடம்) தான் உங்கள் அண்ணனுக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்று கேட்க வேண்டும். என் பாதை தனி, என் பயணம் தனி, என் லட்சியம் தனி. அதில் மற்றவர்களை கூட்டுச் சேர்த்து சண்டை போட முடியாது' என்று பதில் அளித்தார்.

பேட்டியின் போது மண்டல செயலாளர் பிரேம்சந்தர், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்