தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை வெளியிடுவேன்; சூர்யாசிவா பேட்டி

தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை வெளியிடுவேன் என்று சூர்யாசிவா கூறினார்.

Update: 2022-06-23 20:33 GMT

பஸ்சை கடத்திய வழக்கில் பா.ஜ.க.வின் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யாசிவா நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு திருச்சி பறவைகள் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் கடந்த 11-ந்தேதி சென்னை சென்று விட்டு நள்ளிரவில் திருச்சிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தேன். விக்கிரவாண்டி அருகே உள்ள கெடிலம் என்ற இடத்தில் சாலையில் எனது கார் நின்றபோது, ஆம்னி பஸ் ஒன்று அசுர வேகத்தில் வந்து எனது கார் மட்டுமின்றி அருகே நிறுத்தப்பட்டிருந்த 3 கார்களின் மீதும் அடுத்தடுத்து மோதியது.

இதுகுறித்து அருகே உள்ள திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றேன். அப்போது பஸ்சின் உரிமையாளர் அண்ணாமலை என்பவர் என்னிடம் தொலைபேசி மூலம் பேசினார். ''காரை பழுதுநீக்க ஆகும் செலவை நான் கொடுத்து விடுகிறேன். எனது பஸ்சுக்கு இன்சூரன்ஸ் முதல் பெர்மிட் வரையில் எந்த ஆவணங்களும் இல்லை. தயவு செய்து உதவி செய்யுங்கள்'' என்று கூறினார்.

இதை நம்பி நான் வேறு காரில் எனது ஊருக்கு வந்தேன். இதற்கிடையே விபத்துக்குள்ளான எனது காருக்கு ரூ.6 லட்சம் வரையில் செலவு ஆனது. இந்த தொகைக்கான செலவு விவரங்களை அண்ணாமலையின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிவைத்து பணம் கேட்டேன். பதில் இல்லை.

பிறகு அவருக்கு சொந்தமான பஸ் திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தது. அந்த பஸ்சை நிறுத்தி, அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டேன். அப்போது அண்ணாமலை எனது பஸ்சை நீங்கள் எடுத்துச்செல்லுங்கள். நாளை காலையில் பணத்தை தருகிறேன் என்று கூறினார். அவரது டிரைவர் தான் பஸ்சை ஓட்டி வந்து எங்களது இடத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு சென்றார்.

இதற்கிடையே பஸ் உரிமையாளர் அண்ணாமலை அமைச்சர்கள் சிலர் துணையுடன், நான் அவரது பஸ்சை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாக என்மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால் நான் ஏற்கனவே 21-ந் தேதி புகார் கொடுத்து மனு ரசீது வைத்துள்ளேன். அதன்பேரில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

தி.மு.க. அமைச்சர்களின் அழுத்தத்தின்பேரில், என்மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அமைச்சர் என்ன ஊழல் செய்தார். எங்கு யாருக்கு பினாமி பெயரில் சொத்துள்ளது? என்ற அனைத்து விவரங்களும் எனக்கு தெரியும். என்னை போலீசார் சிறையில் அடைத்தாலும் நான் வெளியே வந்து அந்த விவரங்களை வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் பேட்டி முடித்து மாலை 4.10 மணி அளவில் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அப்போது போலீசார் அவரை போலீஸ் வாகனத்தில் துரத்திச்சென்று 4.20 மணி அளவில் அவருடைய காரை மறித்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்