'செஸ் ஒலிம்பியாட்' தொடக்க விழாவில் முழு உடல்நலத்துடன் பங்கேற்பேன் முதல்-அமைச்சர் அறிக்கை

ஜனாதிபதி தேர்தலில் நேரில் சென்று வாக்களிக்கிறேன் என்றும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முழு உடல்நலத்துடன் பங்கேற்பேன் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2022-07-17 23:59 GMT

சென்னை,

கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னை தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம்பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

உடலுக்கும், மனதுக்கும் தெம்பு

கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு நலன் விசாரித்தனர். பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கடிதம் மூலமாக நலம் விசாரித்தனர். அந்த கடிதங்களை எல்லாம் தொடர்ந்து படித்து வருகிறேன். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையுடன் அந்த கடிதங்களும் உடலுக்கும் மனதுக்கும் தெம்பு தந்தது.

முதல்-அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டு கொண்டேன் என்பதால் இந்த கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருமலும் சளியும் மட்டும் இருந்ததால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

டாக்டர்கள் குழுவுக்கு நன்றி

டாக்டர்கள் மோகன் காமேஸ்வரன், அரவிந்தன், எழிலன் எம்.எல்.ஏ., தீரஜ் என இந்த 4 பேரும் காவேரி மருத்துவமனையில் என்னை தினமும் நல்ல முறையில் கவனித்து, விரைந்து நலம்பெற உதவினார்கள். அவர்களுக்கும் அவர்களுடன் துணைநின்ற மருத்துவக்குழுவினருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாளை (இன்று) டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. என்னை நம்பி, தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பெரும் பொறுப்பினை உணர்ந்து, முதல்-அமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை, எடுக்க வேண்டிய முடிவுகளை, செயல்படுத்த வேண்டிய திட்டங்களை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு

திங்கட்கிழமையன்று (இன்று) ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டு திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

அதே நாளில் (இன்று) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த மகத்தான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன்.

தமிழ்நாடு என்ற பெயரால் மட்டுமல்ல, 'திராவிட மாடல்' ஆட்சியின் விளைவினாலும் நம் மாநிலத்திற்கு பெருமைகளை சேர்த்து வருகிறோம். அதில் ஒரு பெருமையாகத்தான், 44-வது 'செஸ் ஒலிம்பியாட்' சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

தொடக்க விழா

'செஸ் ஒலிம்பியாட்' தொடக்க விழாவில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளால் முழுமையான உடல்நலத்துடன் நான் பங்கேற்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் என்ற பொறுப்பினை சுமந்து, நாட்டு நடப்பை கவனிப்பதுபோலவே தி.மு.க. என்ற ஜனநாயக பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பினையும் சுமந்திருப்பதால், கட்சிப்பணிகளையும் மருத்துவமனையில் இருந்தபடியே கவனித்து வந்தேன்.

பெருங்கனவு

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும், உலக நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய மாநிலமாகவும் உயர்த்த வேண்டும் என்பது என் பெருங்கனவு. அதனை அடையவேண்டும் என்றால் இப்போது உழைப்பதைவிடவும் இன்னும் அதிகமாக உழைத்திட வேண்டும். நான் மட்டுமல்ல, நம்முடைய அரசில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் அயராது உழைத்திட வேண்டும். ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க.வினர் ஒவ்வொருவருக்கும்கூட அந்த பொறுப்பு இருக்கிறது.

சில அரைவேக்காடுகள் குறுக்கும் நெடுக்குமாக விமர்சன சேற்றை வீசியபடி ஓடும். நாம் சற்று ஒதுங்கிக்கொண்டு, அவற்றை கடந்து செல்ல வேண்டும். நம்மை தாக்கி, அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்தி கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது.

முன்னேறி செல்வோம்

அரசியல் பாதையில் குறுக்கிடும் அத்தகைய பேர்வழிகளை, இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறி செல்வோம். வம்படியாக பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரை தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம்.

மக்களுடன் நாம் எப்போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்