கடனை அடைக்க கொள்ளை கும்பலை உருவாக்கினேன்கைதான அமீர் பரபரப்பு வாக்குமூலம்
ரூ.20 லட்சம் கடனை அடைக்க கொள்ளையடிக்கும் கும்பலை உருவாக்கியதாக நாகர்கோவிலில் டிரைவர் வீட்டில் நடந்த கொள்ளையில் கைதான அமீர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்,
ரூ.20 லட்சம் கடனை அடைக்க கொள்ளையடிக்கும் கும்பலை உருவாக்கியதாக நாகர்கோவிலில் டிரைவர் வீட்டில் நடந்த கொள்ளையில் கைதான அமீர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பர்தா அணிந்த கொள்ளை கும்பல்
நாகர்கோவில் வேதநகர் மேலபுதுத் தெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 53). கடந்த 26-ந் தேதி இரவு இவரது மனைவி ஜாஸ்மின் மற்றும் மகள்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது காரில் பர்தா அணிந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல், வீட்டில் புகுந்து முகமது உமர் சாகிப்பை தாக்கி கைகளை கட்டி, பீரோவில் இருந்து 20 பவுன் நகையை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த கும்பல் வீட்டின் வெளியே செல்ல முயன்ற போது ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்த ஜாஸ்மின் மற்றும் மகள் அங்கு வந்து கொள்ளை கும்பலை தடுக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி காரில் தப்பி செல்ல முயன்றனர்.
கைது- தனிப்படை அமைப்பு
இதற்கிடையே ஜாஸ்மினின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மேலும் 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
அவர்களில் ஒருவர் இளம்பெண் என்பதும், இவர்கள் அனைவரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இளம்பெண் உள்பட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நாகர்கோவில் இடலாக்குடி வயல் தெருவை சேர்ந்த அமீர் (47), இடலாக்குடி ரகீம் (33), அழகியபாண்டியபுரம் எட்டாமடை கவுரி (36) என்பதும் தெரியவந்தது. மேலும் மேலசரக்கல்விளையை சேர்ந்த மீரான் (40), கோவில்பட்டியை சேர்ந்த சாா்லஸ், கோட்டார் இருளப்பபுரம் ஷேக் முகமது (35), மைதீன் புகாரி ஆகியோர் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதையடுத்து ரகீம், கவுரி, அமீர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் பதுங்கலா?
தப்பி ஓடியவர்களை பிடிக்க நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடியவர்கள் கேரளா மற்றும் கோவில்பட்டியில் பதுக்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் ஒரு தனிப்படையினர் கேரளாவுக்கும், மற்றொரு தனிப்படையினர் கோவில்பட்டிக்கும் விரைந்துள்ளனர். மேலும் மற்றொரு தனிப்படையினர் குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் தேடி வருகிறார்கள்.
கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேரின் உறவினர்கள், நண்பா்கள் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தலைமறைவானவர்களின் செல்போன் எண்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
இந்தநிலையில் கைதான இளம்பெண் கவுரி, அமீர் மற்றும் ரகீம் ஆகியோர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபராக அமீர் செயல்பட்டு வந்தார். இவர் வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்து கடைகளில் விற்பனை செய்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் தொழில் பாதிக்கப்பட்டு ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. இதையடுத்து வீடு மற்றும் கடைகளில் கொள்ளையடித்தால் தான் விரைவில் கடனை அடைத்து, தொழிலை மீண்டும் பலப்படுத்த முடியும் என முடிவெடுத்தார்.
இதற்காக அவர் கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவரான தனது நண்பர் சார்லசை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். மேலும் கொள்ளையடிக்கும் பணத்தில் 30 சதவீதம் வரை பங்கு தருவதாகவும் கூறினார். உடனே சார்லசும் கொள்ளையடிக்க ஒப்புக்கொண்டார்.
100 பவுன் வரை எதிர்பாா்ப்பு
இதனைதொடர்ந்து அமீர் தனது நண்பரான ரகீம், உறவினர் மைதீன் புகாரி ஆகியோரையும் சேர்ந்தார். இதேபோல் இளம்பெண் உள்பட மற்றவர்களையும் இணைத்து கொள்ளை கும்பல் உருவாக்கப்பட்டது.
பின்னர் பல நாட்கள் நோட்டமிட்டு முகமது உமர் சாகிப்பின் வீட்டில் முதல் கொள்ளை சம்பவத்ைத அரங்கேற்றினர். அங்கு 100 பவுனுக்கு மேல் நகைகளும், குறைந்தது ரூ.10 லட்சம் வரை ரொக்க பணமும் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. பணத்திற்கு ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட முதல் சம்பவத்திலேயே மாட்டிக்கொண்டனர்.
இவ்வாறு கைதானவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.