புதுச்சேரி முதல்வருடன் சகோதரியாக பணியாற்றுகிறேன்
புதுச்சேரி முதல்வருடன் சகோதரியாக பணியாற்றுகிறேன் என்று திருவாரூரில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
கொரடாச்சேரி:
புதுச்சேரி முதல்வருடன் சகோதரியாக பணியாற்றுகிறேன் என்று திருவாரூரில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
விருது வழங்கும் விழா
சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி திருவாரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. சிறப்புறையாற்றினார். விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மண் மிகுந்த சிறப்புக்குரியது. நான் வாழ்க்கை பாடத்தை தஞ்சையில் தான் கற்றுக்கொண்டேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்கள் மிகுந்த அன்பு செலுத்துபவர்கள். அவர்களை பார்த்துதான் எனக்கு பொது வாழ்வின் மீது பற்றுதல் ஏற்பட்டது.
சகோதர உணர்வோடு...
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். புதுவையிலும் அன்போடு மக்கள் பழகி வருகிறார்கள். பலர் நான் கவர்னராக இருந்து அரசியல் செய்வதாக சொல்கிறார்கள். அதே நேரத்தில் புதுவை முதல்வர் என்னிடம் சகோதர உணர்வோடு பழகி வருகிறார்.
அவருக்கு நான் சகோதரியாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவன தாளாளர் சந்திரா முருகப்பன், நாராயணி நிதி லிமிடெட் நிர்வாகி கார்த்திகேயன், ஆன்மீக ஆனந்தம் அமைப்பின் நிறுவனர் கனகராஜன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.