அப்பா இடத்தில் மு.க.ஸ்டாலினை வைத்து பார்க்கிறேன்; எப்போதும் அவர் பின்னால் நிற்பேன் – கனிமொழி எம்.பி. பேச்சு
அப்பா இல்லாத இடத்தில் மு.க.ஸ்டாலினை வைத்து பார்க்கிறேன், எப்போதும் அவர் பின்னால் நிற்பேன் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
சென்னை,
சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழு இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதேபோல், திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் திமுக துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
அண்ணா, கருணாநிதி ஏற்றிருந்த பொறுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக ஏற்று கொண்டு நம்மை வழிநடத்துகிறார். எந்த நேரத்திலும் கருணாநிதி தனது கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன் என தனது வாழ்நாள் முழுவதும் இருந்து வருகிறார். பெரியார், அண்ணா கனவுகளையும் அவர் ஆட்சியில் நிறைவேற்றி காட்டினார்.
கருணாநிதி இறந்த பிறகு திமுகவில் வெற்றிடம் உருவாக வேண்டும் என கட்சியின் பரம்பரை பகைவர்கள் எதிர்பார்த்தனர். பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து வெற்றிடத்தில் காற்று போல் இல்லாமல், ஆழிப்பேரலையாக மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று அதனை சாதித்து காட்டியுள்ளார்.
அப்பா இல்லாத இடத்தில் உங்களை (மு.க.ஸ்டாலினை) வைத்து பார்க்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் எப்போதும் அணிவகுத்து அவர் பின்னால் நிற்பேன் என கூறினார்.